ஆசீர்வாத உபவாச ஜெபம்

இயேசு விடுவிக்கிறார் ஆசீர்வாத உபவாச ஜெபம்...

கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான். நீதி. 28:25

தொழில் முனைவோருக்கு

ஊழியத்திற்கு செல்லுகிற இடமெங்கும் தொழில் செய்கிற தேவபிள்ளைகள் நஷ்டத்தினாலும், கடன் பிரச்சனையினாலும் கலங்குகிறதை காண முடிகிறது. எங்களுக்கு மக்கள் எழுதுகிற கடிதங்களிலும் இப்படிப்பட்ட பிரச்சனைகளே அதிகம் இருக்கிறது. எனவே இத்தகைய மக்களுக்காக பாரத்தோடு ஜெபித்த பொழுது இவர்களுக்காக விசேஷித்த ஆசீர்வாத உபவாச ஜெபம் ஒழுங்கு செய்ய ஆவியானவர் கட்டளையிட்டார். 2003ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வியாபாரம் மற்றும் தொழில் செய்கிற பிள்ளைகளின் ஆசீர்வாதத்திற்காக ஆசீர்வாத உபவாச ஜெபம் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான கர்த்தருடைய பிள்ளைகள் கலந்து கொண்டு ஆசீர்வதிக்கப்படுகின்றனர். சகோ. மோகன் சி. லாசரஸ், சகோ. அப்பாத்துரை ஆகியோர் வழங்கும் தேவ செய்திகள் மெய்யாகவே தொழில் செய்கிற தேவபிள்ளைகளுடைய வாழ்வில் பரிசுத்தத்தையும் மறுரூபத்தையும் கொண்டு வருகிறது. ஜெபிக்கிறவர்களாக உண்மையுள்ளவர்களாக, தேவனுக்கு கொடுக்கிறவர்களாக ஒவ்வொருவரும் மாறுகிறார்கள். தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட பிரபலமான தொழில் அதிபர்கள் கொடுக்கிற சாட்சிகள் வருகிற ஒவ்வொருவருடைய விசுவாசத்தையும் பெலப்படுத்தி தன்னையும் தேவன் இப்படி ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது.

இந்த ஜெபத்தில் கலந்து கொள்கிற ஒவ்வொருவரின் வாழ்விலும் தேவன் ஆசீர்வாதத்தையும் உயர்வையும் கட்டளையிடுகிறார். தொழில் இல்லாதவர்களுக்கு தேவன் புதிய தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். பல லட்சங்கள் கர்த்தருக்கு பயந்து தொழில் செய்கிறவர்கள் எல்லா கடன் பிரச்சனையோடு வருகிறவர்கள், அற்புதமாக அதிலிருந்து விடுதலை பெறுகிறார்கள். சிலர் கோடிக்கணக்கான ரூபாய் கடனிலிருந்து விடுதலை பெற்று சாட்சி சொல்லி தேவனை மகிமைப்படுத்தியிருக்கிறார்கள். பிசாசின் வல்லமை பில்லி சூனிய வல்லைமகளிலிருந்து அநேகர் விடுதலை பெற்றிருக்கிறார்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் பட்டணங்களிலும் நம்பர் ஒன் தொழிலதிபர்கள் கர்த்தருடைய பிள்ளைகளாக இருக்க வேண்டும். இதுவே எங்கள் விருப்பம். எல்லா நிலையிலும் செழித்திருக்க வேண்டும். இதுவே எங்கள் வாஞ்சையும் ஜெபமும். நிச்சயம் அது நிறைவேறும்.

சாட்சிகள்

நான் இரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். படிப்பு ஏறாத காரணத்தினால் ஹோட்டலில் சர்வர் வேலைக்கு சேர்ந்தேன். பின்பு டீக்கடை வைத்து நடத்தினேன். அதிலும் நஷ்டம் ஏற்பட்டது. உடனே மீண்டும் ஹோட்டலில் ரூம் பாயாக வேலை பார்த்து வந்தேன். அந்த சமயத்தில் சகோதரன் ஊழியத்திற்காக வந்த போது நான் வேலை செய்த அந்த ஹோட்டலில் தங்கினால். கண்ணீரோடு அவரிடத்தில் சென்று ஜெபித்தேன். அவர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள், இயேசு ஆசீர்வதிப்பார் என்று கூறினார். கீழ்ப்படிந்து இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பித்தேன். சில வருடங்களில் எல்லாரும் ஆச்சரியப்படும்படி தேவன் அநேகருக்கு வேலை கொடுக்கிற அளவிற்கு என்னை உயர்த்தியிருக்கிறார். இயேசுவின் அன்பை விளங்கப்பண்ணும்படி அநேக சமூகசேவைகள் செய்து வருகிறேன். இதினிமித்தம் ஏராளமான மாநில அரசு, மத்திய அரசு விருதுகள் வாங்கியுள்ளேன்.

ரஞ்சித் (ரஞ்சித் கேட்டரிங், கோவை)

நான் ஒரு பரம்பரை கிறிஸ்தவன், நான் கர்த்தரை நம்பியிருந்ததினால், 1976ம் வருடத்தில் திருச்சியில் ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்து, பலவிதங்களில் தொழில்களைச் செய்தேன். பணம் பெருக பெருக கர்த்தரைத் தேடுவதற்கு மறந்து போனேன். ஜெப வாழ்க்கை போனது. இதனிமித்தம் பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டது. வங்கிக்கு 1 கோடியும், வெளியிடங்களில் 50 லட்சம் என சுமார் 1.5 கோடி ரூபாய் கடன்காரனானேன். கடன்காரன் வட்டி மட்டும் மாதத்திற்கு ரூ. 40,000 கட்டிக் கொண்டிருந்தேன். தொழிலில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையினிமித்தம் என் சொத்துக்களை விற்க முடியாத ஒரு சூழ்நிலை வந்தது. 10 வருடங்கள் என் நிலைமை இப்படியே போய் கொண்டிருந்தது. வாழ்க்கையே வெறுத்துவிட்டது.

அப்பொழுதுதான் உணர்வடைந்தவனாக கர்த்தருக்கு என்னை முற்றிலுமாக ஒப்புக் கொடுத்தேன். 2005ம் ஆண்டு நடைபெற்ற வியாபாரிகளுக்கான கூட்டத்திற்கு என் மனைவியின் வற்புறுத்தலினால் வந்து, கூட்டத்தில் பின் பகுதியில் உட்கார்ந்து நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ஜெபவேளையில் சகோதரர் அவர்கள், ஆவியானவரின் ஏவுதலினால், என் பெயரைச் சொல்லி அழைத்து என் பிரச்சனைகளையும் வெளிப்படுத்தி, கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பதாகச் சொல்லி ஜெபித்தார்கள். அந்நேரம் ஒரு வல்லமை என் மீது இரங்கியது.

நானும் விசுவாசத்தோடுகூட வீட்டுக்குப் போனேன், கர்த்தர் தான் சொன்னபடியே என் விசுவாசத்தைக் கனப்படுத்தி, எல்லாப் பிரச்சனைகளையும் மாற்றி 1.5 கோடி ரூபாய் கடனையும் அடைக்க மாபெரும் கிருபை செய்து, என்னை ஆசீர்வதித்திருக்கிறார்.

சந்திரன் (ஒரியண்ட் இன்டஸ்ட்ரீ, திருச்சி)

பார்வையாளரின் எண்ணிக்கை

  • இன்று : 72
  • நேற்று : 148
  • இந்த மாதம் : 4779
  • மொத்தம் : 59210

எங்களிடம் 6 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

பின் தொடர்க