நீங்கள் இங்கே உள்ளீர்கள் :- முகப்பு
பத்திரிக்கை ஊழியம்
கர்த்தரின் திட்டமான வழி நடத்துதல்படி 1980ம் வருடம் ஜனவரி மாதத்தில் இயேசு விடுவிக்கிறார் பத்திரிகை ஊழியம் ஆரம்பிக்கப்பட்டது. முந்நூறு பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வூழியம், இன்று மாதந்தோறும் 6 மொழிகளில் மூன்று லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு அனுப்பப்படுகிற அளவிற்கு தேவன் ஆசீர்வதித்திருக்கிறார்.
இவ்வூழியத்தின் மூலம் புறஜாதி மக்களை சந்திப்பேன் என்று கர்த்தர் வாக்குக் கொடுத்தபடியால் பத்திரிக்கைக்கென குறிப்பிட்ட சந்தா நிர்ணயிக்கப்படவில்லை. கர்த்தரால் ஏவப்படுகிற தேவப்பிள்ளைகள் மூலம் கர்த்தர் இதன் தேவைகளை சந்தித்து வருகிறார்.
ஒவ்வொரு மாதமும் கர்த்தருடைய சமுகத்தில் காத்திருந்து அவர் கொடுக்கிற செய்தியை முழங்காலில் நின்று சகோதரன் எழுதி வருகிறபடியால் வாசிக்கிற ஒவ்வொருவரும் இதன் மூலம் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
கர்த்தர் எனக்காகவே இந்த செய்தியை தந்திருக்கிறார், இந்த செய்தியின் மூலம் ஆண்டவர் என்னோடு பேசினார் என்று ஒவ்வொரு மாதமும் சாட்சி கடிதங்களை காண்கிறோம். இதில் வெளியிடப்படுகிற சாட்சிகள் அநேகருடைய விசுவாசத்தை பெலப்படுத்தி வருகிறது. தமிழ், ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 6 மொழிகளில் மூன்று லட்சம் பத்திரிகைகள் மாதந்தோறும் அனுப்பப்படுகிறது.
இப்பத்திரிகையின் வடிவமைப்பு, அச்சடிப்பு ஆகிய வேலைகளைசகோ. மோகன்ராஜ் தலைமையிலான ஒரு குழுவினரும், மூன்று லட்சம் பத்திரிகைகளை உறையிட்டு அனுப்புகிற வேலைகளை சகோ. சந்திரன் தலைமையிலான குழுவினரும் கவனித்துக் கொள்கின்றனர்.
நம் பத்திரிகை ஊழியத்தின் மூலம் பாவம் உணர்த்தப்பட்டு இரட்சிக்கப்பட்ட மக்களுண்டு, துன்ப நேரத்தில் ஆறுதலும், நம்பிக்கையும் பெற்ற மக்களுண்டு. கர்த்தருடைய வசனம் வெறுமையாய் திரும்பாது என்ற வார்த்தையின்படி வாசிக்கிற ஒவ்வொருவரும் இதன் மூலம் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
1. எனக்கு சுமார் 1 1/2 லட்சம் ரூபாய் கடன் இருந்தது. கடன் பிரச்சனையிலிருந்து மீளமுடியாமல், இரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணி மிகுந்த மனபாரத்துடன் திருநெல்வேலி நோக்கி பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். என் அருகில் உட்கார்ந்திருந்த ஒருவர் இயேசு விடுவிக்கிறார் பத்திரிக்கையை சிரித்த முகத்தோடு என் கையில் கொடுத்தார். தற்கொலை செய்ய வேண்டும் என்றிருந்த நான், இதில் என்னதான் இருக்கிறது படித்துதான் பார்க்கலாமே என்று எண்ணியவாறு படிக்க ஆரம்பித்தேன்.
பத்திரிக்கையிலுள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் என்னோடு கூட நேரடியாக பேசுவதைப் போலிருந்தது. வாசித்தவுடன் எனக்குள்ளே இயேசு எனக்கு உதவி செய்வார் என்று ஒரு நம்பிக்கை வந்தது. அந்த நாள் நாலுமாவடியில் திறப்பின் வாசல் ஜெபம் நடைபெறும் நாளாய் இருந்தது. உடனடியாக அந்த ஜெபத்தில் பங்குகொள்ள தீர்மானித்து என் போக்கை மாற்றிக் கொண்டு நாலுமாவடிக்கு வந்து ஜெபத்தில் கலந்து கொண்டேன்.
ஜெபவேளையில் சகோதரர் அவர்கள் என் பிரச்சனையை தேவகிருபையினால் வெளிப்படுத்தி எனக்காக ஜெபித்தார்கள். அந்த வேளையில் தேவனுடைய வல்லமை என் மீது இறங்கி வந்தது. ஆண்டவருக்கு என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தேன். தற்கொலை எண்ணம் என்னை விட்டு வெளியேறியது. உள்ளத்தில் இனம்புரியாத தேவ சமாதானம் நிரம்பி வழிந்தது. கொஞ்ச நாட்களுக்குள்ளாக எல்லாக் கடனையும் அடைத்து முடிக்கும்படிக்கு கர்த்தர் கிருபை செய்தார். இப்பொழுது நாங்கள் குடும்பமாக இயேசுவை எற்றுக்கொண்டு அவருக்கே ஆராதனை செய்து சாட்சியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தங்கபாண்டி (சிவந்தியாபுரம்)
நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தெய்வ பயமே இல்லாமல் வாழ்ந்து வந்தேன். என் 15வது வயதிலேயே சிகரெட் குடிக்கவும், 17வது வயதில் குடிப்பழக்கத்திற்கும், 19வது வயதில் விபசார பாவத்திற்கும் அடிமையானேன். 20 வயதிற்குள்ளாக கஞ்சா, போதை மாத்திரை பயன்படுத்துகிறவனாக மாறிவிட்டேன். காலையில் எழும்பியவுடன் குடிக்க அல்லது கஞ்சா பயன்படுத்த ஆரம்பித்து விடுவேன். காரணமில்லாமல் சண்டைகள், மோசமான நண்பர்கள், வாழ்க்கையே நரகம் போல் மாறிவிட்டது. போதை தெளிந்தவுடன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். ஆகவே மீண்டும் குடிக்க ஆரம்பித்து விடுவேன்.
அச்சமயத்தில் பரப்பாடியில் விடுதலைப் பொருவிழா நடைபெற்றது. கூட்டத்தில் பங்குபெற்றால் மாறிவிடுவேன் என பயந்து, நண்பர்களுடன் நெல்லைக்கு சென்று விட்டேன். நண்பர்களுடன் மீண்டும் மோசமான பாதையில் என் வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் நான் உயிருக்குயிராக நேசித்த நண்பனே என்னை முழுவதுமாக ஏமாற்றி விட்டபொழுது விரக்தியடைந்தவனாக அவனை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று யோசித்தவனாக மீண்டும் சொந்த உருக்கு சென்றேன். என் தாயார் நாலுமாவடி திறப்பின் வாசல் ஜெபத்திற்கு 26.12.92 அன்று சென்றார்கள். நானும் அவருடன் சென்றேன். சகோதரனின் பிரசங்கத்தை கேட்டு எனக்குள் ஒரு மாற்றம் உண்டானது. செய்தியை கேட்ட நாளிலிருந்து பாவ உணர்வடைந்தவனாக, இருந்த நான் 31.12.92 அன்று பாவத்தை அறிக்கையிட்டேன். என்னை ஏமாற்றிய நண்பனை கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வும் வெளியேறியது.
எங்கள் வீட்டிற்கு வரும் உங்கள் பத்திரிக்கையை வாசித்து இயேசுவை அதிகமாக அறிந்து கொண்டேன். 13 வருட பாவங்கள் என்னை விட்டு முற்றிலுமாக வெளியேறியது. ஒவ்வொரு மாதமும் திறப்பின் வாசல் ஜெபத்தில் பங்கு கொள்கிறேன். என்னைப் பார்க்கிற அனைவரும் இன்று இவனா? இப்படி! என்று ஆச்சரியப்படுகின்றனர்.
1993ம் ஆண்டு ஜூன் மாதம் இப்படி சாட்சி சொன்ன சகோ.இராஜசேகர் அவர்கள் இப்போது எப்படி இருக்கிறார் அறியும்படிக்கு அவரை தொடர்பு கொண்டோம். அவர் இப்பொழுது எப்படி இருக்கிறார் என்பதை அவரே தன் வாயினால் சொல்ல கேட்கலாமா?
அன்றைக்கு இயேசுவை ஏற்றுக் கொண்ட எனக்கு வேத அறிவை கொடுத்து, ஜெபிக்க தெரியாதிருந்த என்னை பல மணி நேரங்கள் முழங்காலில் நின்று மன்றாடி ஜெபிக்க, திறப்பிலே நிற்க தேவன் என்னை உருவாக்கி இருக்கிறார். கிராம ஊழியங்களில் தேவன் வல்லமையாக பயன்படுத்தி வருகிறார். நான் பணிபுரியும் ஸிணூளீயிலும் ஜெப ஐக்கியத்தை ஏற்படுத்தி நடத்தி வருகிறேன். பல இடங்களில் தேவ செய்தி கொடுத்து ஜெபம் நடத்த கர்த்தர் கிருபை கொடுத்திருக்கிறார். படிப்பறிவில்லாத எனக்கு தேவன் ஸிணூளீல் நல்லதொரு வேலை கொடுத்து, நல்ல குடும்பத்தை கொடுத்து 3 பிள்ளைகளையும் கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறார். கொலை வெறியோடு இருந்த என் சுபாவத்தை இன்றைக்கு ஆத்துமாக்களுக்காக கண்ணீர் வடிக்கிறவனாக கர்த்தர் மாற்றியிருக்கிறார். அன்றைக்கு இயேசுவை ஏற்றுக் கொண்ட நான் இன்றைக்கு அநேகருக்கு இயேசுவை வெளிப்படுத்துகிறவனாக மாறி இருக்கிறேன் என்று அவர் சந்தோஷமாக தன்னுடைய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
இராஜசேகர் (பரப்பாடி)
